டான்டன் : பெண்கள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் வெற்றிபெற்றது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில், 11 வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) நடைபெற்று வருகிறது.  ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள், லீக் முறையில் மோதுகின்றன.

இதன் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்தை வென்ற இந்திய அணி, நேற்று வெஸ்ட் இண்டீசுடன் மோதியது. . ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், பீல்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மாத்யூஸ், வால்டர்ஸ் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. கோஸ்வாமி, ஷிகா பாண்டே ஓவர்களில் மாத்யூஸ் தலா 2 பவுண்டரிகள் அடித்தார்.

அடுத்து   ‘சுழல்’ வீராங்கனை ஏக்தா பிஸ்த் பந்துவீசினார். இதில் வால்டர்ஸ் 9 ரன்களில் அவுட் ஆனார்.  தொடர்ந்து தீப்தி சர்மா பந்து வீச்சில் ‘ மாத்யூஸ் (43) ஆட்டமிழந்தார்.  இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து மட்டை பிடித்த இந்திய அணியின் ஸ்மிரிதி மந்தனா, பூணம் ராத் ஜோடி மோசமான துவக்கத்தையே அளித்தது.  பூணம் ராத், முதல் ஓவரில் ‘டக்’ அவுட்டானார். தீப்தி சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மிதாலி 46 ரன்களில் அவுட் ஆனார். மந்தனா சதம் அடித்தார்.

இறுதியில் இந்திய அணி 42.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஏற்கனவே இங்கிலாந்தை வென்ற இந்திய அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும்.