தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக தினமும் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமன்றி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
கடந்த இரு தினங்களுக்கு முன் பெங்களூரின் பாணத்தூர்-பாலகெரே பகுதியில் ஒரு பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, மாணவர்கள் பின் கதவு வழியாக தப்பித்தனர்.

இந்நிலையில் பெங்களூரு சாலையில் பள்ளி பேருந்தில் செல்லும் மாணவிகள் எடுத்த வீடியோவில் சாலைகளின் மோசமான நிலை மற்றும் அவர்கள் ஒவ்வொரு நாளும் கடந்து வரும் சோதனைகள் பற்றி பேசியுள்ளனர்.
“உலகத் தரம் வாய்ந்த” சாலைகள் இப்போது பள்ளங்கள் மற்றும் மோசமான பராமரிப்பு ஆகியவற்றால் நிறைந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்படுவதாகவும் குறிப்பாக மாலையில் வீடு திரும்பும்போது ஏற்படும் நெரிசலால் விளையாட்டு உள்ளிட்ட இதர நடவடிக்கைகளை தவறவிடுவதாகக் கூறுகின்றனர்.
வகுப்பறைகளில் அமர்ந்திருப்பதை விட பேருந்துகளில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறியுள்ள அவர்கள் தினமும் பல கிலோமீட்டர் பயணிப்பதால் சில நேரங்களில் காயமடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.
“இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு” என்று பெருமைகொள்ளும் பெங்களூரில் வாகனங்கள் குறிப்பாக பள்ளி பேருந்துகள் பேரணி வாகனங்களைப் போல சாலையில் அணிவகுத்து நிற்பது அன்றாட வாடிக்கையாகிவிட்டது.
இதனால் இந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.