சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி,  சென்னை   தீவுத் திடலில்  தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

முன்னதாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட டெண்டரை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தற்போது கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட அனுமதி அளித்துள்ளது.

நடப்பாண்டு  தீபாவளி பண்டிகையையொட்டி, தீவுத்திடலில் 50 பட்டாசுக் கடைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், 46 கடைகள் பட்டாசு விற்பனையாளர்களுக்கும், மீதமுள்ள 4 கடைகள் கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்க இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே சுற்றுலாத்துறை தரப்பில் டெண்டர் கோரப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில்,  தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை . இந்த டெண்டர் குறித்து,  தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் நிர்வாக இயக்குனரே டெண்டர் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் டெண்டரை மாற்றியமைக்கவும், டெண்டர் விண்ணப்பத்தை எந்த காரணமும் தெரிவிக்காமல் ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கு அதிகாரம் உள்ளதாக டெண்டர் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போன்ற சில நிபந்தனைகளை நீக்கி வரும் அக்டோபர் 18 ம் தேதி முதல் நவம்பர் 1 ம் தேதி வரை தீவுத்திடல் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தப்பட்ட டெண்டரை வெளியிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் இருந்து கூட்டுறவு சங்கத்திடம் மாற்றி இருப்பதாக தெரிவித்தார். மேலும் கூட்டுறவு சங்கத்தின் இணை பதிவாளர் முருகானந்தம் தரப்பில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தீவுத்திடலில் 50 பட்டாசுக்கடை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும், 46 கடைகள் பட்டாசு விற்பனையாளர்களுக்கும், மீதமுள்ள 4 கடைகள் கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்க இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  பட்டாசு கடைகள் ஏ, பி, சி,டி என பிரிக்கப்பட்டு அதற்கான விலையும் அதில் அறிக்கப்பட்டுள்ளது அதன் படி ஏ பிரிவில் கடைகள் அமைக்க ஒவ்வொரு கடைக்கும் 2,25,000 ரூபாயும், பி பிரிவில் கடைகள் அமைக்க ஒவ்வொரு கடைக்கும் 4 லட்ச ரூபாய், சி பிரிவில் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், டி பிரிவில் கடைகளை 3 லட்ச ரூபாயும் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான டெண்டர் வரும் அக்டோபர் 24 ம் தேதி மாலை 3 மணிக்கு தீவுத்திடலில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தீவுத்திடல் வளாகத்திற்கு வாடகையாக 82லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு கூட்டுறவு சங்கம் செலுத்த வேண்டி உள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆஜராகி, மின்சாரம், தீயணைப்பு வசதிகள், கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என வாதம் வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தீவுத்திடலில் பட்டாசுக் கடை அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.