சென்னை
மெட்ரோ ரயில் சேவையை திருமங்கலம் முதல் திருநினறவூர் வரை நீட்டிக்க வேண்டும் என சி பி எம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை மாவட்ட சி பி எம் கட்சியின் 23 ஆம் மாநாடு 2 நாட்கள் நடந்தன. இந்த மாநாட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு தலைவர் மா.பூபாலன் வரவேற்றார். சி பி எம் கட்சிக்கொடியை மூத்த நிர்வாகி ஆர்.ராஜன் ஏற்றினார். இந்த மாநாட்டை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்துப் பேசினார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
இந்தியா முழுவதும் சுமார் 12 கோடி பேர் வரை வேலை வாய்ப்பு பெற்றுள்ள சிறு, குறுந்தொழில்களின் நிலை வீழ்ச்சியின் விளிம்பில் தற்போது நிற்கிறது.
எனவே மொத்த தொழில் உற்பத்தியில் 45சதவீதமும், ஏற்றுமதியில் 48 சதவீதமும், வேலைவாய்ப்பில் 40 சதவீதமும் தந்திடும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை மத்திய மாநில அரசுகள் பாதுகாத்திட வேண்டும்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் போல, வடசென்னையில் நூலகம் மற்றும் கலையரங்கம் அமைக்க வேண்டும்.
மெட்ரோ ரயில் சேவையை வட சென்னை முழுவதும் இணைக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
திருநின்றவூரில் இருந்து திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் இயக்க வேண்டும்.
கும்மிடிப்பூண்டி வரை புறநகர் ரயில்களுக்கென்று தனிப் பாதையை உருவாக்கிக் கூடுதலாக ரயில்கள் இயக்கிட வேண்டும்.
நகர்ப்புற ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 200 நாள் வேலை உத்தரவாதத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு உருவாக்கவேண்டும்.
வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஓராண்டு முழுவதற்கும் மாதம் ரூ. 7500 வீதம் செலுத்தவேண்டும்.
இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய குடியிருப்புகளுக்குப் பதிலாக எந்த கட்டணமும் வசூலிக்காமல் புதிய குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும்.
வடசென்னையில் பக்கிங்காம், கேப்டன், ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள், ஆறுகளில், நீர்வழித் தடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆகியவை ஆகும்.