சென்னை: தோழர் நல்லக்கண்ணு இன்று பிற்பகல் 1.55மணிக்கு காலமானார்.  இதை அவரது கட்சியான சிபிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

 10 வயது சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு  வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி காலமானார்.

தோழல் நல்லகண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 1ம் தேதிசென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று 1.55 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

மறைந்த நல்லகண்ணுவிற்கு அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மூத்த கம்யூனிஸ்டு தலைவரான நல்லக்கண்ணுவின் சொந்த ஊரானது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்.  1925ம் ஆண்டு பிறந்த  நல்லகண்ணு, இந்திய விடுதலைப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு, கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்.

குறிப்பாக, மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.

18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து ஏழை, தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைக்காக போராடியவர்.

1992 முதல் 2005 வரை 13 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்தவர்.

தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் போராட்டங்கள் மற்றும் சிறையில் கழித்தவர்.

மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களின் விவரத்தை தொகுத்து நூலாக வெளியிட்டவர்.

25 ஆண்டுகாலம் விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பணியாற்றியவர்.

தாமிரபரணியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை எதிர்த்து தனது 93வது வயதில் வழக்கு தொடுத்து அதற்கு எதிராக தடை பெற்றவர்.

தனது 80வது பிறந்தநாளில் கட்சி வசூலித்து கொடுத்த ரூ.1 கோடியை அதே மேடையில் கட்சிக்கே திருப்பி கொடுத்தவர்.

தமிழ்நாடு அரசு அவரை கவுரவித்து தகைசால் தமிழர் விருது வழங்கியது.  அரசு வழங்கிய ரூ.10 லட்சத்துடன் ரூ.5,000-ஐ சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பி கொடுத்தவர நல்லக்கண்ணு.

[youtube-feed feed=1]