திருவனந்தபுரம் :
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
கூ.ட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ.), கேரளாவில் என்கவுண்டர் என்ற பெயரில் மாவோயிஸ்ட்கள் கொல்லப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அங்குள்ள வயநாடு பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் தேனியை சேர்ந்த வேல்முருகன் என்ற மாவோயிஸ்ட், போலீஸ் என்கவுண்டரில் உயிர் இழந்தார். இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தபின் என்கவுண்டரில் வீழ்த்தப்பட்ட 8 வது மாவோயிஸ்ட் இவர்.
திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு கூட்டத்தில், வேல்முருகன் என்கவுண்டரில், சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ஐ. மாநில செயலாலர் கானம் ராஜேந்திரன் “நாகரீக சமுதாயம் இது போன்ற என்கவுண்டர்களை ஏற்காது” என்றார்.
“இதுபோல் என்கவுண்டர்கள் நடத்தினால் மத்திய அரசின் நிதி தாராளமாக கிடைக்கிறது. அதை மனதில் வைத்தே இந்த என்கவுண்டர்கள் நிகழ்த்தப்படுகின்றன” என பகிரங்கமாக குற்றம் சாட்டிய ராஜேந்திரன் “இது போன்ற என்கவுண்டர்கள், இந்தியாவில் கம்யூனிஸ்ட்களின் மரியாதையை குலைத்து விடும்” என்று மேலும் தெரிவித்தார்.
கேரளாவில் உள்துறையையும் சேர்ந்து கவனிக்கும் முதல்-அமைச்சர் பினராயி விஜயன், மாவோயிஸ்ட் வேல்முருகன் என்கவுண்டரில் வீழ்த்தப்பட்டதற்கு நியாயம் கற்பித்த நிலையில், அதனை இந்திய கம்யூனிஸ்ட் கண்டித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
– பா. பாரதி