இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ கடந்த டிசம்பர் 30ம் தேதி விண்ணில் செலுத்திய PSLV-C60 ராக்கெட் சுமந்து சென்ற POEM-4 தளத்தில் ஆய்வுக்காக கொண்டுசெல்லப்பட்ட காராமணி விதைகள் (Cowpea seeds) முளைவிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நுண் புவியீர்ப்பு விசையில் தாவர வளர்ச்சியை ஆய்வு செய்ய, சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான காம்பாக்ட் ஆராய்ச்சி தொகுதி (CROPS) பரிசோதனையின் ஒரு பகுதியாக, விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) மூலம் இஸ்ரோ நிறுவனம் எட்டு Cowpea விதைகளை அனுப்பியது.

இவை முளைவிட்டிருப்பதாக ISRO தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது, “விண்வெளியில் வாழ்க்கை துளிர்க்கிறது! VSSC’s CROPS (Compact Research Module for Orbital Plant Studies) PSLV-C60 POEM-4 தளத்தில் வெற்றிகரமாக 4 நாட்களில் Cowpea விதைகள் முளைத்தது. இலைகள் விரைவில் வெளிவரும்” என்று குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 30 அன்று இரவு PSLV-C60 இரண்டு SpaDeX செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.

ராக்கெட்டின் நான்காவது நிலை, சுமந்து சென்ற POEM-4 தளம், செவ்வாய் கிழமை முதல் பூமியில் இருந்து 350 கிமீ உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.

இந்த தளத்தில் பயிர் பரிசோதனை உள்ளிட்ட மொத்தம் 24 ஆய்வுகள் நடத்தப்படுகிறது.

CROPS சோதனை, பணியின் ஒரு பகுதியாக, விண்வெளியின் தனித்துவமான மைக்ரோ கிராவிட்டி நிலைமைகளில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துகிறது, இது எதிர்கால நீண்ட கால விண்வெளிப் பயணங்களுக்கான ஆராய்ச்சியின் முக்கிய பகுதியாகும்.

முழு தானியங்கு அமைப்பாக வடிவமைக்கப்பட்ட சோதனையானது, ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு நீடிக்கும், இது விதை முளைப்பதை நிரூபிக்கவும் மற்றும் மைக்ரோ கிராவிட்டி சூழலில் இரண்டு-இலை நிலை வரை தாவர வளர்ச்சியை நிலைநிறுத்தும் வகையில் இந்த ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.