அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் மாடுகளின் தோலை உரித்தததாக கூறி,  இந்துத்துவ அமைப்பினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்  தலித் இளைஞர்களை ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 11 ம் தேதி மோட்டா சமதியாரா என்ற கிராமத்தில் மாடுகளின் தோலை உரித்ததாக கூறி நான்கு தலித் இளைஞர்களை காரில் கட்டி வைத்து இந்து மத அமைதி காப்பு குழுவினர் கடுமையாக அடித்து உதைத்தனர்.   இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த செயலைக் கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் உறுப்பினர் அனில் மதாத் உட்பட ஏழு பேர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தனர்.
a
மேலும் சுரேந்திரநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் மாட்டுத்தோல்களை குவித்து வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நெருக்கடியான சூழல் ஏற்பட்டதால்  சம்பவம் குறித்து விசாரிக்க சிஐடி பிரிவுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்ககோரி போராட்டங்கள் தொடர்ந்தபடி உள்ளது.
இந்த நிலையில், மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் தலித் இளைஞர் நால்வரையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்  ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
“இந்த இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்” என்று கூறிய அவர், “எப்போதும் மதச்சார்மின்மையின் பக்கம் காங்கிரஸ் இருக்கும். மதவாதத்தை எதிர்த்து நின்று அப்பாவி மக்களை காக்கும்” என்றும் தெரிவித்தார்.