கேமரூன் நாட்டைச்சேர்ந்த பிரபல சாக்ஸபோன் கலைஞர் மனு டிபாங்கோ கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவரது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது.
அதில், “2020 மார்ச் 24 ஆம் தேதி, 86 வயதில், எங்கள் பேபி க்ரூவ், மனு திபாங்கோவின் இழப்பை நாங்கள் ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம்,” என்று தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், மூத்த ஆப்ரோ ஜாஸ் நட்சத்திரம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரு பிரெஞ்சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கடந்த வாரம் செய்தி வெளியானது. இந்த நிலையில், இன்று அவர் மரணித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது 86 வயதாகும் மனு டிபாங்கோ கேமரூன் நாட்டைச்சேர்ந்த பிரபல சாக்ஸ்போன் இசைக் கலைஞர். 1972ம் ஆண்டு வெளியான “சோல் மாகோசா” என்ற ஆல்பம் பிரபலமானது.
சாக்ஸபோன் இசைக்கலைஞரான அவர், தனது சொந்த பாணியும் பாரம்பரிய கேமரூனிய இசையுடன் இணைத்து வாசித்து புகழ் பெற்றவர். கேமரூன் கால்பந்து அணியை ஆதரிப்பதற்காக அவர் இயற்றிய ஒரு பாடல் பெரும் வெற்றியை பெற்றது. இது நியூயார்க் டி.ஜேக்களால் பிரபலப்படுத்தப்பட்டது.
இவர் மறைந்த பிரபல பாப் இசை பாடகரான மைக்கேல் ஜாக்சன், தனது புகழ்பெற்ற “திரில்லர்” ஆல்பத்தில் உள்ள பாடல்களுக்கு, தன்னிடம் இருந்து இரண்டு மெட்டுக்களை கடன் வாங்கியதாக 2009ம் ஆண்டு பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியது குறிப்பிடத்தக்கது.