கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு ஏற்படும் கடுமையான பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் “தவறில்லா இழப்பீடு கொள்கை” (No-fault compensation policy) ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 10, 2026) இந்த உத்தரவை வழங்கியது. கோவிட் தடுப்பூசி எடுத்த பிறகு ஏற்பட்டதாகக் கூறப்படும் ‘AEFI’ (After Effects From Immunisation) மரணங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜேக்கப் புலியெல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த வழக்கில், தடுப்பூசி எடுத்த பிறகு ஏற்படும் பக்கவிளைவுகளை பொதுமக்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள் தனியுரிமை பாதிக்காமல் பதிவு செய்யும் வகையில் இணையதள பொதுத் தளத்தை அமைக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

“தடுப்பூசி எடுத்த பிறகு ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த தகவல்கள் மிகவும் முக்கியமானவை. அவை தடுப்பூசியின் செயல்திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, தொற்று நோய்கள் தொடர்பான அறிவியல் ஆய்வுகளுக்கும் உதவுகின்றன. எனவே இதுபற்றிய தகவல்களை சேகரிப்பதும், அதில் பொதுமக்கள் அதிகமாக பங்கேற்பதும் அவசியம்,” என்று 2022 தீர்ப்பில் நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.

தற்போதைய தீர்ப்பில், தடுப்பூசி பக்கவிளைவுகளை கண்காணிக்கும் தற்போதைய நடைமுறை தொடர வேண்டும் என்றும், அதற்கான தகவல்கள் காலந்தோறும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி காரணமாக ஏற்பட்டதாக கூறப்படும் பக்கவிளைவுகளை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய புதிய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.

அதே நேரத்தில், இந்த “தவறில்லா இழப்பீடு கொள்கை” உருவாக்கப்படுவது மத்திய அரசு அல்லது பிற அதிகாரிகள் தவறு செய்ததாக ஒப்புக்கொள்வதாக பொருள் கொள்ள முடியாது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சட்டப்படி கிடைக்கும் பிற வழிகளையும் பயன்படுத்துவதற்கு தடையில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த வழக்கை ரச்னா கங்கு மற்றும் வேணுகோபாலன் கோவிந்தன் என்ற பெற்றோர் தாக்கல் செய்திருந்தனர். கோவிட் தடுப்பூசி எடுத்த பிறகு ஏற்பட்ட பக்கவிளைவுகளால் தங்களது மகள்கள் உயிரிழந்ததாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கோலின் கான்சால்வேஸ், “தடுப்பூசி எடுப்பது விருப்பம் என அரசு கூறினாலும், நடைமுறையில் அது பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் கட்டாயப்படுத்தப்பட்டது. தடுப்பூசி பக்கவிளைவுகள் குறித்த தகவல்கள் முறையாக வெளியிடப்படவில்லை” என்று வாதிட்டார். மனுதாரர்களின் 18 மற்றும் 20 வயதுடைய ஆரோக்கியமான மகள்கள் தடுப்பூசி எடுத்த பிறகு கடுமையான மூளை இரத்த உறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, தடுப்பூசி காரணமாக அரிதாக ஏற்படும் AEFI மரணங்களுக்கு அரசு நேரடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று சட்டரீதியாக கட்டாயப்படுத்துவது சரியாக இருக்காது என்று தெரிவித்தது.

அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 2022 நவம்பர் 19 வரை நாட்டில் மொத்தம் 219.86 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் 92,114 AEFI சம்பவங்கள் (0.0042%) பதிவாகியுள்ளன. அதில் 89,332 (0.0041%) சிறிய பக்கவிளைவுகள் என்றும், 2,782 (0.00013%) கடுமையான பக்கவிளைவுகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக 1,171 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]