கொரோனா காலக் கூத்துகள் பாகம் 1

திருமணம்

– வழிப்போக்கன்

நான் ஒரு கிராமத்தின் வழியேப் போய்க் கொண்டிருந்தேன், வழிப்போக்கன் தானே நான், அதனால் வழியெங்கும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றேன்.

அன்று காலை ஒரு 9:00 மணி இருக்கும், தெருவை அடைத்து பந்தல் போடப்பட்டிருந்த வீட்டைப் பார்த்தேன்.

சரி, கல்யாண வீடு தானே, போய் பந்தியில் உட்கார்ந்தால் துரத்தியா விடுவார்கள், எனப் பசி வயிற்றைக்கிள்ள உள்ளே நுழைந்துவிட்டேன்.

பந்தி ரொம்பிடுச்சு, அடுத்த பந்திக்கு தான் என சிலர் பேசினார்கள்.

சரி அதுவரை வேடிக்கை பார்க்கலாம்னு ஒரு திண்ணை மேல் உட்கார்ந்துவிட்டேன்.

அடடா, பொண்ணு இப்பதான் எட்டாவது பாஸானா, அதுக்குள்ள கட்டிக் குடுத்திட்டாங்க என ஒரு பெண், இன்னொரு பெண்ணிடம், சொன்னாள்.

உடன் அடுத்தவள், அடப்போ கவியம்மா, நான் கூட தான் காலேஜ் படிக்க வச்சேன், என்ன ஆச்சு, காதல் கல்யாணம், கோர்ட் கேசுன்னு இப்ப எம்மவ வீட்டுலதான் இருக்கா, என்ன செய்ய சொல்ற ?

பூங்காவனம் நீ சொல்றது சரிதான், என் பிள்ளை படிச்சு வேலை பார்க்குறா, எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.

நீ சொல்றது சரிதான், கவியம்மா போன வருஷம் 12வது படிக்கிற நம்ப ஊருப் பொண்ணு பக்கத்து ஊர்க்கார பையனைக் கூட்டிட்டுப் போய் ஊர் ரெண்டாகி, அடிதடி, போலீஸ், கேசு, தீ வைக்கிறதுன்னு நம்ப ஊரே அல்லோலப்பட்டத மறந்துட்டியா ?

மறக்கல, அதுக்குக் கல்யாணம் தீர்வு இல்லையே பூங்கா, இந்தப் பிள்ளை பாவம் இல்லையா ?

ஆமாம், பாவம் தான் அவளோட அப்பா, அம்மா ரெண்டு பேரும், பெங்களூர்ல கொத்தனார் வேலை செய்றாங்க உறவுக்காரங்க வீட்ல இருந்தா இந்தப் பாப்பா, அங்க ஏதோ பிரச்சினையாம், இப்ப வேற கொரோனா லீவு இல்லை அதனால பள்ளிக்கூடமும் இல்லை, அதனால தான் சொந்தக்காரப் பையனுக்குக் கட்டிக்குடுக்குறாங்க.

நாம ஏதோ காரணம் சொல்லி சின்னப்பிள்ளைங்களக் கட்டிக் குடுக்கறோம், என்ன பண்றது, ஆறு மாசத்துக்கு முன்னாடி கெழக்காலத் தெரு லட்சுமணன் மவள, இந்த மாதிரிதான  சின்ன வயசுலக் கட்டிக் குடுத்து, குழந்தைப் பொறக்கும்போது செத்துப் போச்சி, சொல்லதான் முடியும், யாரும் கேட்க மாட்டாங்க பூங்கா, கல்யாணத்துக்கு வந்தமா சாப்டமானு போகணும் சரி வா பந்திக்கு போலாம் என எழுந்து சென்றனர் இருவரும்.

உடன் இன்னொரு குரல் கேட்டது, டேய் செல்போன்ல போட்டோ எடுக்காதிங்கடா, நாளைக்கு பள்ளிக்கூடம், பிரச்சினைனு வந்துச்சின்னா குழந்தைகளை காப்பாத்துற குருப்ன்னு ஒன்னு வரும், நமக்கு ஆவாதவன் போட் டோவ அங்க அனுப்பிடுவான், என்றார் ஒரு ஆள்,

உடன், இன்னொருவர் மச்சான், மாட்றது நீங்க மட்டுமில்லை, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் தான் வச்சி கும்மிடுவாங்க, ஞபாகம் வச்சிக்கோங்க.

அதெல்லாம் பார்த்துக்கலாம் மச்சான், எம் பொண்டாட்டி இப்ப பன்னிரெண்டாவது படிக்கிறா, 10 வதுல கல்யாணம் ஆச்சு பள்ளிக்கூடத்துக்கு போவும் போது தாலி, மெட்டி எல்லாம் கழட்டி வச்சிட்டு போவா, இதெல்லாம் நம்ப ஊர்ல சகஜம் தானே ? என்றான் இன்னொருவன்.

ஆமாண்டா, சில இடத்துல புடிச்சு ஜெயிலுக்கு அனுப்புறாங்கடா அதான் யோசிச்சேன்.

அதெல்லாம், தெரியாத அளவுக்கு பார்த்துக்கலாம் என்றான் இன்னொருவன்.

அப்போதுதான் கவனித்தேன் சிறுமியான அவளுக்கு 14 வயது தான் மாப்பிள்ளைக்கு 25 வயது இருக்கும், பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி மேடையில் நடந்து கொண்டாள், கண்களில் ஒரு பயம், விளையாடும் பிள்ளைகளைப் பார்த்து ஒரு ஏக்கம் என அந்தப் பெண் நிலையைக் காண சகிக்கவில்லை.

அடடா, பசிக்குதுன்னு இங்க வந்தேன், இந்தக் கல்யாணத்தில் நான் சாப்பிட்டால், அந்தப் பாவத்தின் ஒரு பங்கு எனக்கும் உண்டு எனத் தெரிந்து, பந்திக்கு செல்லாமல் திரும்பி விட்டேன்.

பின்குறிப்பு : எத்தனை சட்டம், எத்தகைய ஆட்சி வந்தாலும், பால்ய திருமணம் நடக்கிறதுதான், அதிலும் இந்த கொரோனா காலத்தில் அதிகம் தான்.