டெல்லி: 34 நாள்களில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டு 34 நாள்களில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் தடுப்பூசியை அதி வேகமாக செலுத்தும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இந்தியா முன்னேறியுள்ளது.
அமெரிக்காவில் 31 நாள்களில் ஒரு கோடி பேருக்கும், பிரிட்டனில் 56 நாள்களில் ஒரு கோடிப் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது:
இன்று வரை நாட்டில் சுகாதாரப் பணியாளா்கள் உள்பட 1,01,88,007 முன்களப் பணியாளா்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதில் 6,10,899 போ் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.
முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 28 நாள்களுக்குப் பிறகு பிப்ரவரி 13ம் தேதி முதல் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டது. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 10,70,895 பேர் அதாவது 10.5% பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.