டெல்லி: கொரோனா தடுப்பூசி போடும் வகையில் 30 கோடி பேர் கொண்ட பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
உலகெங்கும் பரவி உள்ள கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் அதன் பணிகள் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளன. கொரோனா தடுப்பூசி தயாரான பின்னர் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செயல்திட்டங்களை அனைத்து நாடுகளும் முன் எடுக்க ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில் கொரோனா தடுப்பூசியை பெறும் மையங்களை அடையாளம் காண்பது முதல், தடுப்பூசி மையங்களை ஏற்பாடு செய்வது வரை, அதற்கான வரைபடத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது. அதன்படி முன்கள பணியாளர்களுக்கு தான் முதலில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகள் கூறி உள்ளனர்.
கிராமங்கள்,நகரங்கள் என நாடு முழுவதும் போராடும் சுகாதார பணியாளர்கள் மட்டுமல்லாது, காவல்துறையினருக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நிதி ஆயோக்கின் டாக்டர் வினோத் பால் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய அரசானது ஏற்கனவே 30 கோடி பயனாளிகளை அடையாளம் காணும் பணிகளை தொடங்கி உள்ளது. இந்த 30 கோடி பேரும், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி தொழிலாளர்கள், காவல்துறையினர், 50 வயதுக்கு மேற்பட்ட 26 கோடி பேர், 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுவர்.
தற்போது நடைமுறையில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி போடும் திட்டம் போன்றே, இவின் என்ற மின்னணு தளம் மூலமாக சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும். தடுப்பூசி போட வேண்டிய இடம், நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் பயனாளிகளின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்.
போலிகளை களையெடுக்க அவர்களின் ஆதார் எண் இணைக்கப்படும். ஆதார் எண் இல்லாவிட்டால், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பயனாளி பயன்படுத்திக் கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு, ஒவ்வொருவருக்கும் ‘க்யூஆர் கோடு’ உருவாக்கப்பட்டு, அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்படும்.
அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஞ்சாயத்து கட்டிடங்கள் ஆகியவை தடுப்பூசி போடப்படும் மையங்களாக வகைப்படும். கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைக்க, 28 ஆயிரம் குளிர்பதன கிடங்குகள் உபயோகப்படுத்தப்படும் என்றும், தனியாரிடம் இருக்கும் கிடங்குகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.