டெல்லி: முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருட்களை சீனாவிடம் இருந்து பெற இந்தியா முயற்சித்து வருகிறது.
கொரோனா வைரசல் இருந்து தற்காத்து கொள்வதற்கான என் 95 வகை கொண்ட முகக்கவசங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் முக்கியமாக வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெறுவது பற்றி இந்தியா தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான அழுத்தத்தை இது குறைக்கும். சீனா மற்றும் தென் கொரியாவிலிருந்து N-95 முகமூடிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் தற்போதைய சூழலில் அதன் உற்பத்தி பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது.
இரு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இந்த பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலவியது. இந்திய சந்தைகளில் அவை கிடைக்க பெறுவதற்கான முயற்சிகளை எடுத்தாலும், இறக்குமதி பொருட்கள் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.
இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு உதவ, பொருள்கள் ஏற்றுமதி சந்தையை திறக்க சீனா ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இரு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை மதிப்பீடு செய்ய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வான்ஹி உடன் தொலைபேசியில் ஆலோசித்துள்ளார்.