சென்னை: கொரோனா பரவல் காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இன்னமும் தொடங்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, சென்னை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டு வந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன. கொரோனா பரவல் குறையாததால் இந்த சிகிச்சைகளை தொடர்வதில் ஆபத்துகள் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் இது போன்ற சிகிச்சைகளை தொடங்க மருத்துவமனைகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டாலும், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் அதற்கு தயக்கம் காட்டுகின்றன.
இது குறித்து ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகத்துறை இயக்குநர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சையை தொடர்வது எதிர்காலத்தில் கொரோனா போக்கின் நிலைமை பொறுத்தது. அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதற்கான தேவைகள் இப்போது இருக்கின்றன. கொரோனா தொற்றுகள் இப்போது குறைந்து விட்டாலும், நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.