மும்பை:

கொரானா அச்சுறுத்தல் பரவலை தடுக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல்வர்,  எம்எல்ஏ, எம்எல்சிகள் சம்பளத்தில் 60% குறைக்கப்படும் என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அதிரடியாக அறிவித்து உள்ளார்.

மேலும் அரசு ஊழியர்களின் சம்பளத்திலும் 50 சதவிகிதம் வரை பதவிகளுக்கு ஏற்றவாறு குறைக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் பல்வேறு ஊழியர்களின் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில நிதியமைச்சராக இருக்கும் துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்து உள்ளர்.

பொருளாதாரத்தை பாதிக்கும் கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் உட்பட மாநிலத்தில் உள்ள பொது பிரதிநிதிகளின் சம்பளத்தில் 60 சதவீத வெட்டு இருக்கும் என்றும், மார்ச் மாதம் முதல்வர், மற்ற அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சி மற்றும் உள்ளாட்சி நிர்வாக சபைகளின் பிரதிநிதிகளின் சம்பளத்தில் 60 சதவீதம் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், முதலாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு அரசு ஊழியர்களின் சம்பளத்தில்  50 சதவீதமும், மூன்றாம் வகுப்பு ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதமும் குறைக்கப்படும், அதற்கு கீழ் உள்ள கடைநிலை ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில் மாநிலத்திற்கு வலுவான நிதி உதவி தேவைப்படுவதால், மக்கள் பிரதிநிதிகள் மாநில நிதித் துறையுடன் ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றும் முதல்வர் தெரிவித்து உள்ளார்.