டில்லி

கோவோவாக்ஸ் என்னும் கொரோனா தடுப்பூசியின் சோதனைகள் தொடங்கி உள்ளதால் வரும் செப்டம்பரில் விநியோகம் தொடங்கும் எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.  எனவே இங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.   இதில் முதல் கட்ட பணிகளில் சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டன.

தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட பணிகளில் 60 வயதை கடந்தோருக்கும் 45 வயதைக் கடந்த இணை நோய் உள்ளோருக்கும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.  வரும் ஏப்ரல் 1 முதல் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.  தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு மருந்துகள் போடப்படுகின்றன.

அமெரிக்கத் தடுப்பூசி நிறுவனமான நோவாவாக்ஸ் நிறுவனம் தான் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை விரிவாக்கவும் உற்பத்தி செய்யவும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் உடன் ஒப்பந்தம் இட்டது.  கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தைய  இந்த ஒப்பந்தம் மூலம் கோவாவாக்ஸ் என்னும் இந்த மருந்து இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள நாடுகள் பயனடையும் என கூறப்பட்டது.

நேற்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அதார் பூனாவாலா, “கோவாவாக்ஸ் மருந்தின் சோதனை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த மருந்து ஏற்கனவே ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் உருமாறிய கொரோனா மீதான பரிசோதனையில் 89% திறனுள்ளது தெரிய வந்துள்ளது.  வரும் செப்டம்பர் மாதம் இந்த மருந்து விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.