தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக்-இயோலை அரசியலமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதவியில் இருந்து நீக்கியது. இதன் மூலம், கடந்த நான்கு மாதங்களாக நாட்டில் நிலவி வந்த அரசியல் ஸ்திரமின்மைக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

டிசம்பர் 3, 2024 அன்று, யூன் இராணுவச் சட்டத்தை விதித்ததற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார், இது ஒரு பெரிய அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்தது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இராணுவச் சட்டத்தை அமல்படுத்திய பிறகு, யூன் நூற்றுக்கணக்கான வீரர்களையும் காவல்துறையினரையும் பாராளுமன்றத்திற்குள் நுழையச் செய்தார். ஒழுங்கைப் பராமரிக்க இதைச் செய்ததாக யூன் கூறினார். ஆனால் ஒரு மூத்த ராணுவ அதிகாரி பின்னர், தனக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பைத் தடுக்க இதைச் செய்யச் சொல்லப்பட்டதாகக் கூறினார்.

இருப்பினும், யூனை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். பின்னர் டிசம்பர் 14 அன்று அவர் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து ஹான் டக்-சூ இடைக்கால ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை பதவி நீக்கம் செய்ய முயற்சி நடந்தது. ஆனால் நீதிமன்றம் அதைத் தடுத்து நிறுத்தியதுடன் யூனின் வெளியேற்றத்தையும் நீதிமன்றம் ஒருமனதாக உறுதி செய்தது.

இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சியோல் நகர மையத்தில் உள்ள அரண்மனைக்கு அருகில் மக்கள் கூடி, கோஷங்களை எழுப்பி, நடனமாடி, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த இரண்டு மாதங்களில் தேசியத் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. தற்போதைய கருத்துக் கணிப்புகளின்படி, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் லி ஜீமெங் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.