கோவை
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோவை பெண் காவலர் ஒருவர் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் கொடுத்தார் இதையொட்டி கோவை ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் அவர் மீது முதல் வழக்குப்பதிவு செய்து தேனி அருகே பழனிச்செட்டிபட்டியில் இருந்த சவுக்கு சங்கரை, கடந்த 4-ந் தேதி கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கரை பழனிசெட்டிபட்டியில் கைது செய்யும்போது, அவரது காரில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசார் 2 ஆவது வழக்கை பதிவு செய்து அதிலும் அவர் கைதானார்.அடுத்தடுத்து சேலம், திருச்சி போலீசார் சார்பிலும் அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏற்கனவே சென்னை ‘சைபர் கிரைம்’ காவல்துறை 2 வழக்குகளை பதிவு செய்திருந்தனடிப்படையில் அவர் கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
கடந்த 10 ஆம் தேதி இந்த 2 வழக்குகள் தொடர்பாக சவுக்கு சங்கர் அன்று கோவையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு தலைமை மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் மீண்டும் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தேனி காவல்துறையினர் கஞ்சா வழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டின் பூட்டை உடைத்து கடந்த 9-ந்தேதி சோதனை நடத்தியதுடன் சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவருடைய அலுவலகத்திலும் சோதனை நடத்தி ‘சீல்’ வைத்தனர். சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ராத்தோர் இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை பிறப்பித்தார்.
இன்ரு யூடியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவண பாபு அனுமதி அளித்துள்ளார். அதாவது நாளை மாலை 5 மணி வரை சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு அளித்திருந்த நிலையில் ஒருநாள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.