பெங்களூரு

டிகையும் முன்னாள் காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனாவுக்கு ஊடகங்கள் ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கடந்த 2013 ஆம் வருடம் மே மாதம் ஐபிஎல் போட்டிகளில் நடந்த சூதாட்டம் குறித்து ஆசியாநெட் குழுமத்தின் கன்னட தொலைக்காட்சியான சுவர்னா நியூஸ் செய்தி ஒளிபரப்பியது. அப்போது அந்த செய்தியில் ஒரு பிரபல கன்னட நடிகைக்கு இந்த சூதாட்டத்தில் தொடர்புள்ளதாக கூறப்பட்டது.  அத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விளம்பர தூதராக முன்பு பதவி வகித்த திவ்யா ஸ்பந்தனா வின் புகைப்படம் காட்டபட்டது.

தமது புகைப்படம் தேவை இன்றி செய்திகளில் காட்டப்பட்டதாக திவ்யா ஸ்பந்தனா எதிர்ப்பு தெரிவித்தார். இதன் மூலம் மக்கள் இந்த சூதாட்டத்தில் தொடர்புடைய நடிகை என தம்மை நினைப்பார்கள் எனவும் இதனால் தமக்கு ஏற்பட்ட அவப்பெயருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் வழக்கு தொடர்ந்தார். திவ்யா ஸ்பந்தனா காங்கிரசில் இணைந்ததில் இருந்து ஐபிஎல் போட்டிகலில் இருந்து முழுமையாக விலகி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இது குறித்து சுவர்னா நியுஸ் சார்பாக ஆசியாநெட். “ஒரு செய்தி நிறுவனம் என்னும் முறையில் நாங்கள் பொது நிகழ்வுகள் மற்றும் பொது வாழ்வில் ஈடுபடுவோர் குறித்த செய்திகள் வெளியிடுவதில் தவறில்லை. அத்துடன் நாங்கள் நேரடியாக திவ்யா ஸ்பந்தனா குறித்து எந்த செய்தியும் அளிக்கவில்லை. எனவே அவருடைய நற்பெயர் கெட எந்த விதமான வாய்ப்பும் இல்லை.

ஐபிஎல் சூதாட்ட வழக்கை விசாரித்த காவல்துறை இந்த சூதாட்டத்தில் இரு கன்னட நடிகைகள் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதை நாங்கள் ஒளி பரப்பினோம். இதில் ஏதும் தவறு இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். “ என நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

நீதிமன்றம், ”கடந்த 2013 ஆம் வருடம் ஐபிஎல் விவகாரங்களில் திவ்யா ஸ்பந்தனா எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். அத்துடன் காவல் துறை எந்த இடத்திலும் திவ்யா ஸ்பந்தனாவின் பெயரை தனது விசாரணை அறிக்கையில் தெரிவிக்கவில்லை. எனவே இந்த சூதாட்ட விவகாரம் குறித்த செய்தியில் திவ்யா ஸ்பந்தனாவின் புகைப்படத்தை காட்ட எவ்வித தேவையும் இல்லை.

இது திவ்யாவுக்கு இந்த சூதாட்டத்தில் தொடர்புள்ளதாக மக்கள் நினைக்க நிச்சயம் வகை செய்யும். ஆகவே சுவர்ணா நியுஸ் மற்றும் ஆசியாநெட் ஊடகம் திவ்யா ஸ்பந்தனாவுக்கு நஷ்ட ஈடாக ரூ,50 லட்சம் வழங்க வேண்டும் அது மட்டுமின்றி திவ்யா கேட்டுக் கொண்டபடி இனி அவர் சம்பந்தப்பட்ட எந்த செய்தியையும் இந்த ஊடகம் வெளியிடக்கூடாது” என தீர்ப்பளித்துள்ளது.