ஸ்ரீவில்லிபுத்தூர்

னது மாணவிகளைத் தவறான பாதைக்கு வழி நடத்த முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுப் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை நகரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் சில மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அக்கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அத்துடன் இந்த வழக்கில் தொடர்புடையதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் தற்போது ஜாமீனில் வந்துள்ளனர்.

கடந்த மாதம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பெண்கள் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  நிர்மலாதேவி அந்த வழக்கில் ஆஜராகவில்லை.  ஆனால் முருகன், கருப்பசாமி இருவரும் ஆஜராகினர்.  நீதிபதி பரிமளா அவர்களிடம் மட்டும் விசாரணை நடத்தி மூன்று பேரும் நவம்பர் 18ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.. அந்த உத்தரவின்படி இன்று  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இன்று இந்த வழக்கின் முதல் சாட்சியான தேவாங்கர் கல்லூரியின் தாளாளர் ராமசாமி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஆஜராகினர். பேராசிரியை நிர்மலா தேவி ஆஜராகவில்லை.

நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், பேராசிரியை நிர்மலாதேவியின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும், அதனால் வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை என்றும் தெரிவித்தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி, நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததோடு, பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் இந்த வழக்கு வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலாதேவியின் வழக்கறிஞர், ” நேற்று நிர்மலாதேவி என்னிடம் பேசியபோது, தம்மைத் தொடர்ச்சியாக மிரட்டுவதாகவும், தமக்கு மனநலம் பாதிப்பதாக உள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், தம்மால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை என்பதால் தம்மை மருத்துவமனையில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று அவர் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். ஆயினும் தற்போது அவர் கட்டாயம் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளதால், அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.