இடுக்கி: கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழக, கேரள எல்லையில் ஒரு ஜோடிக்குச் சாலையில் திருமணம் நடைபெற்றது.
கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு முதல் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து 5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, அதுவும் இந்த மாதத்துடன் முடிகிறது. ஆனாலும் பல தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மூணாறைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணுக்கும், தமிழகத்தின் கோவையை சேர்ந்த ராபின்சன் என்ற இளைஞருக்கும் தமிழக, கேரள எல்லையில் சாலையில் திருமணம் நடைபெற்றது.
மார்ச் 22ம் தேதியே கோவை சரவணம்பட்டியில் உள்ள கோயிலில் திருமணம் நடந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போடப்பட்டது. பின்னர் இந்த ஜூனில் கேரளாவில் உள்ள இடுக்கியில் திருமணம் நடத்த முறைப்படி முடிவு செய்யப்பட்டது.
நிச்சயிக்கப்பட்டபடி இடுக்கியில் திருமணம் செய்வது என்றால், இரு மாநிலத்தில் உள்ள உறவினர்கள் வந்து செல்வதிலும், கூட்டம் கூடுவதிலும் சிக்கல் ஏற்படும். ஆகையால் திருமண வீட்டார் ஒரு முடிவெடுத்தனர்.
அதாவது, இடுக்கியில் இருமாநில எல்லையில் உள்ள சின்னார் பாலத்தின் அருகே ரோட்டிலேயே திருமணம் செய்து கொள்ளலாம். இந்த நிகழ்வுக்கு குறைந்த உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
சின்னார் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் காத்திருந்தபோது, மணமகன், ராபின்சன், வெள்ளை சட்டை மற்றும் வேஷ்டி அணிந்து, தமிழக எல்லையிலிருந்து நடந்து சென்றார். மறுபுறம் மணமகள், பிரியங்கா, பச்சை நிற புடவையை அணிந்து, கேரளா எல்லையில் இருந்து நடந்து வந்தார்.அதன்படி, இருமாநில எல்லையில் மணமகளும், மணமகனும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போது அவர்களும், உடன் வந்த ஒரு சிலரும் முகமூடி அணிந்திருந்தனர்.
அதிகாரிகள் சாலையில், ஒரு துணி ஜமுக்காளத்தை விரித்து அதில் ஒரு விளக்கு மற்றும் பழங்கள் போன்ற பிற பொருட்களை வைத்து திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர். சமூக விலகலை பயன்படுத்தி, மணமகன் மற்றும் மணமகனின் குடும்பங்கள் தம்பதியரிடமிருந்து விலகி நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டன. குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பாஸ் பெற முடியாததால் திருமணமானது எல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சுற்றி இருப்பவர்களின் வாழ்த்துகளுடன் மணமகளின் கழுத்தில் தாலியை கட்டினார் மணமகன்.
இது குறித்து மரையூர் சுகாதார மையத்தை சேர்ந்த ஆய்வாளர் அப்துல் மஜீத் கூறுகையில், அய்யர் இல்லாமல் திருமணம் நடைபெற்றது. சுகாதார மற்றும் கலால் அதிகாரிகள் மணமகனுக்கு மாலையை வழங்கினர் என்றார்.
தேவிகுளம் முன்னாள் எம்எல்ஏவான ஏ.கே.மணி கூறுகையில், யாருக்கும் எந்த சிரமமும் கொடுக்கவில்லை. இரு வீட்டார் தரப்பிலும் முக்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணம் இனிதாக நடந்து முடிந்துள்ளது என்றார்.