நாக்பூர்:

நாடு முழுவதும் சிறுநீரை சேமித்தால் போதும். வெளிநாட்டிலிருந்து யூரியா  வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.


மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாநகராட்சியில் இளம் விஞ்ஞானிகளுக்கு மேயர் கண்டுபிடிப்பு விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, ” யூரியாவை மனிதர்களின் சிறுநீரிலிருந்து தயாரிக்கலாம். என் வீட்டில் எனது சிறுநீரை சேமித்து, பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தி வருகிறேன்.
இயற்கை கழிவுகளில் இருந்தே உயிரி எரிபொருள் தயாரிக்க முடியும். மனித சிறுநீரிலிருந்தும் இயற்கை எரிபொருளை தயாரிக்கலாம்.

சிறுநீருடன் அம்மோனியம் சல்பேட் மற்றும் நைட்ரஜன் சேர்த்தால் இயற்கை எரிபொருள் கிடைக்கும்.  விமான நிலையங்களில் சிறுநீரை சேமித்து வைக்கச் சொல்லியிருக்கின்றேன்.

நாடு முழுவதும் சிறுநீரை சேமித்து வைத்தால், வெளிநாடுகளிடமிருந்து யூரியாவை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
என் யோசனை எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆனால் யாரும் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்.
இந்த மாநகராட்சிகூட எனக்கு ஒத்துழைப்பதில்லை.

மாடு எப்படி அங்குமிங்கும் பார்க்காமல் நேரே பார்த்தபடி செல்லுமோ, அதேபோல் நாம் மக்களை பழக்கப்படுத்தியிருக்கின்றோம்.

மனிதனின் முடியிலிருந்து அமினோ ஆசிட் தயாரிக்கலாம். இதுவும் உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனது விவசாயத்துக்கு முடி உரம் 25% பயன்படுத்துகின்றேன்.

நாக்பூரில் முடி தட்டுப்பாடு ஏற்பட்டு, இப்போது திருப்பதியிலிருந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடியை மாதந்தோறும் வாங்கிக் கொண்டிருக்கின்றேன்.

வெளிநாட்டுக்கு அமினோ ஆசிட்டை ஏற்றுமதி செய்கின்றோம். துபாய் அரசிடமிருந்து 180 கன்டெய்னர் உயிர் உரத்தை எங்கள் நிறுவனம் ஆர்டராகப் பெற்றுள்ளது என்றார்.