அமெரிக்காவின் வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யக் கோரும் நாடுகள் அதற்கான நியாயமான காரணம் இருந்தால் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

உலகளவில் பல்வேறு வணிகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரமிக்க நாடாக அமெரிக்கா உள்ளது. இருந்தபோதும், அந்நாட்டின் உற்பத்தித் துறை குறிப்பிடத்தகுந்த பலத்துடன் இல்லை என்பது நிதர்சனம்.

இதன் காரணமாக பல்வேறு நாடுகள் தங்கள் நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு அதிகப்படியான வரியை விதித்து வருகின்றன.

தற்போது இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வரியை கண்டித்துள்ளதுடன் அவ்வாறு வரி விதிக்கும் நாடுகள் எவை என்று அடையாளம் கண்டதுடன் அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அதிரடியாக அந்நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டார்.

உலகளவில் அமெரிக்கா உடன் நேரடி வர்த்தக போட்டியில் உள்ள சீனா தங்கள் நாட்டு பொருட்கள் மீது 34% கூடுதல் வரி விதித்த அமெரிக்க அதிபரின் எதேச்சதிகாரப் போக்கை கண்டித்து அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் 34% உயர்த்தியது.

சீனாவின் இந்த வரிவிதிப்புக்கு பதிலடி கொடுத்துள்ள அமெரிக்கா ஏற்கனவே அறிவித்த 34% வரியுடன் கூடுதலாக 50% வரி உயர்வை அறிவித்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, தங்கள் நாட்டின் வர்த்தகத்தை நிலைநாட்ட அமெரிக்காவுடன் எந்த எல்லை வரை சென்று போராடவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா தவறுக்கு மேல் தவறு செய்கிறது என்றும் குற்றசாட்டியது.

அதேவேளையில், இதுகுறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சீனா, பேச்சுவார்த்தை நடத்துமளவுக்கு அமெரிக்கா நடந்துகொள்ளவில்லை என்று கருத்துக்கூறியுள்ளது.

இந்த நிலையில், வரி விதிப்பை குறைக்க நியாயமான காரணங்களை வைத்திருக்கும் நாடுகள் வெள்ளை மாளிகையுடன் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கதறல் சத்தம் பத்தல’ சீனாவுக்கு மேலும் 50% அதிக வரி விதித்த டிரம்ப்… ‘தப்பு மேல தப்பு பண்றீங்க’ எச்சரித்த சீனா…