செய்தியாளர் ஒருவரை டி.ராஜேந்தர், கையைப் பிடித்து இழுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலவலகம் எதிரே மிகப் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று நடிகரும், லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர் அறிவித்திருந்தார்.

அதன் படி இன்று முற்பகல் 11.30க்கு டி.ராஜேந்தர் மற்றும் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கூடினர். சற்று நேரத்தில் மேலும் சிலர் வந்தனர்.

ஆர்ப்பாட்டம் துவங்குவதாக அறிவித்த டி.ராஜேந்தர் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து முழக்கமிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். “”மோடியின் அரசை ஆனந்த பவனாக இருக்குமென்று நினைத்தோம். ஆனால் அது கையேந்தி பவனாக இருக்கிறது” என்று விமர்சித்தார்.

பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளத்தார்.  அப்போது ஒரு செய்தியாளர், “நீங்கள் அறிவித்தது போல பெரும் போராட்டமாக இல்லையே. கூட்டம் குறைவாக இருக்கிறதே.. ஐம்பது அறுபது பேர்தான் இருப்பார்கள் போலிருக்கிறதே” என்று கேட்டார்.

இதனால் ஆத்திரமான டி.ராஜேந்தர், வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு செய்தியாளரிடம் பாய்ந்து வந்தார். அதோடு, “ஐம்பது அறுபது பேர்தாா.. வாய்யா வந்து எண்ணிப்பாரு.. எண்ணுய்யா.. எண்ணு…” என்று ஆவேசமாக சொடக்கு போட்டார். அதோடு செய்தியாளரின் கையைப் பிடித்து “வாய்யா.. வா” என்று இழுத்தார்.

பிறகு தானே சமாதானமாகி மீண்டும் மைக் முன் நின்று ஜி.எஸ்.டி. குறித்து பேசத் துவங்கினார்.

செய்தியாளர் கையைப் பிடித்து டி.ரஜேந்தர் இழுத்தது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.