விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாக்கியுள்ள தொலைநோக்கி கருவி ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி.
விண்வெளியில் இருக்கும் அகசிவப்பு கதிர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து பூமிக்கு அதன் முடிவுகளை அனுப்பும் அதிக திறன் கொண்ட இந்த தொலைநோக்கி 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியான் 5 விண்கலத்தின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் தொலைதூரத்தில் இருக்கும் சிறிய கிரகங்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் துல்லியமாக காணமுடியும்.
சமீபத்தில் விண்வெளியில் எடுத்த புகைப்படங்களை நாசா ஆய்வு மையத்துக்கு அனுப்பியுள்ளது.
இந்திய மதிப்பில் (டாலருக்கு நிகரான இன்றைய மதிப்பில்) சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி 10 ஆண்டுகள் வரை செயல்படும் என்று கூறப்படுகிறது.
இந்த தொலைநோக்கி அனுப்பிய பிரபஞ்சத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார், அதனைத் தொடர்ந்து செவ்வாயான்று நாசா சமூக வலைப்பக்கத்தில் இந்த புகைப்படங்களின் நேரடி ஒளிபரப்பு இடம்பெற்றது.
நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் அழகை அற்புதமாக படம்பிடித்துள்ள இந்த தொலைநோக்கி மூலம் வரும் நாட்களில் பிரபஞ்சம் உருவானது எப்படி என்ற ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.