சென்னை
மெட்ரோ ரயில் பாதையை சிறுசேரி – கிளாம்பாக்கத்துக்கு பதிலாக திருப்போரூர் – கேளம்பாக்கம் வழியாக அமைக்க அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றன்றனர்.
சென்னையில் முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானநிலையம் வரை முதல் வழித்தடத்தில் (நீல வழித்தடம்) 23.085 கிலோ மீட்டர் தூரமும், சென்னை சென்டிரலில் இருந்து பரங்கிமலை வரை 2-வது வழித்தடத்தில் (பச்சை வழித்தடம்) 21.961 கிலோ மீட்டர் தூரம் உள்பட 2 வழித்தடங்களில் 45.046 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பிறகு வண்ணாரப்பேட்டையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்யப்பட்டு ஆக மொத்தம் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 2-வது கட்டமாக, மாதவரம்- சிறுசேரி வரை 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை 4-வது வழித்தடமும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியதால், விமானநிலையம் – கிளாம்பாக்கம் மற்றும் பரந்தூரில் விமானநிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் பூந்தமல்லி- பரந்தூர் மற்றும் கோயம்பேடு- ஆவடிக்கு 2-ம் கட்ட விரிவாக்கப் பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது.
கோயம்பேடு- ஆவடி, பூந்தமல்லி- பரந்தூர் இடையிலான திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. கணக்கீட்டின் படி அடுத்த சில ஆண்டுகளை அலுவலக நேரங்களில் 1 மணி நேரத்திற்கு 14 ஆயிரத்துக்கும் மேல் பயணிகள் பயணிக்க வேண்டும்.,
அதே வேளையில் கிளாம்பாக்கம்- சிறுசேரி திட்டத்தில், அலுவலக நேரத்தில் பயணியர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டவில்லை என்பதால் இப்போதைக்கு, கிளாம்பாக்கம்-சிறுசேரி மெட்ரோ ரெயில் நீட்டிப்பு திட்டம் கைவிடப்படுவதாக நிர்வாகம் திடீரென அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம்- சிறுசேரி மெட்ரோ திட்டம் கைவிடப்படுவது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுசேரியில் 50-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருப்பதால் அவற்றில் பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறுசேரியில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல மெட்ரோ ரெயிலை பயன்படுத்துவார்கள்.
கிராமப் பகுதிகளில் இருந்து சிறுசேரிக்கு வேலைக்கு வருபவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். இந்தநிலையில் கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக மாற்றுப்பாதையில் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்யப்படுகிறது. இதுகுறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.