போபால்:
‘‘நெடுஞ்சாலை கட்டுமான பணியில் ஊழலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் புல்டோசருக்கு அடியில் கிடத்தப்படுவார்கள்’’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
மத்திய பிரதேச மாநிலம் பேட்டலில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பில் ஊழல் நடப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கற்களுக்கு பதிலாக ஒப்பந்ததாரர்கள் தான் புல்டோசருக்கு அடியில் இருப்பார்கள். தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் கட்டுமான பணிகள் இருக்க வேண்டும். நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கு நிதி பற்றாகுறை இல்லை. போதுமான நிதி ஆதாரத்தை அரசு வழங்குகிறது.
ஆனால் கட்டுமான பணியில் ஊழல் நடப்பதை அரசு ஏற்றுக் கொள்ளாது. தொழில்நுட்ப காரணங்களால் தான் கட்டுமான பணிகள் தொய்வை சந்திக்கும். எனினும் சரியான பாதையில் பணிகளை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இறக்குமதி செய்யப்படும் ரூ. 7 லட்சம் கோடி பெட்ரோல், டீசல் தான் சுற்றுசூழலை பாதிக்கிறது. இதில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் பாதித்துள்ளது. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.