சென்னை: தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க நடிகை குஷ்பு ஐதராபாத் சென்றார். இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தென்மாநிலங்களில் கால்பதிக்கத் துடிக்கும் பாரதியஜனதா கட்சி, அதற்காக மெனக்கெட்டு வருகிறது. சமீபத்தில் தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் ஒரு தொகுதியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, அங்கு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் வெற்றிக்கொடியை நாட்ட முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது.
பாஜக இலக்கு வைத்திருக்கும் தென்மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று. லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல்களில் பெற்ற படிப்படியான வெற்றியுடன் இப்போது ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலையும் பாஜக எதிர்கொண்டிருக்கிறது.
தெலுங்கானாவில் டிஆர்எஸ்-சின் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி, மற்றும் ஓவைசியின் கட்சி போன்றவைக்கு மக்களிடையே செல்வாக்கு உள்ளது. இந்த இரு கட்சிகளும் கடந்த முறை இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில், தற்போது, இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இதை தனக்கு சாதகமாக பாஜக தீவிரமாக களமிறங்கி உள்ளது. இதன் காரணமாக, தேர்தல் பிரசாரத்திற்கு அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பல தலைவர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். அங்கு தேர்தல் பிரசாரத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், நாங்கள் வெற்றி பெற்றால் ஹைதராபாத் பெயரை பாக்யநகர் என மாற்றுவோம் என அறிவித்து சலசலப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இருந்து குஷ்பு ஐதராபாத் சென்றுள்ளார். அங்கு மாநகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்குசேகரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள குஷ்பு, தான் விமானத்தில் இருப்பது போன்ற புகைப்படத்துடன், “ஐதராபாத் அழைக்கிறது. விரைவில் தரையிறங்கியவுடன் தொடர்பு கொள்கிறேன். உங்களுக்கு நல்ல நாளாக அமையுட்டும்” என்று தெரிவித்துள்ளார்.