பீஜீங்:
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள சீனா, கொரோனா பாதிப்பை தடுக்கும் பணியின்போது, உயிரிழந்தோரை கவுரவித்து, அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பதாக அறிவித்து உள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 53ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், ஈடுபட்டு தங்களது இன்னுயிரை இழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஏப்ரல் 4ந்தேதி (நாளை) தேசிய அளவில் துக்க தினம் அனுசரிக்கப்படும் என்றும், 3 நிமிடம் நாட்டு மக்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.
கொரோனா முற்றிலுமாக விலகியதாக அறிவித்த சீனால், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால், புதிதாக 29 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல, சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவிய ஹூபே மாகாணத்தின் வுஹானில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.