சன்னிவலே :

 

லக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்க்கு, அமெரிக்காவில் இதுவரை 6 பேர் பலியான நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க மக்கள் சீனாவில் நிகழ்ந்தது போல் தாங்களும் தனிமைப்படுத்த படுவோமோ என்ற பீதியில் உறைந்து போயுள்ளனர்.

இதை உறுதிப்படுத்தும் விதமான சம்பவம் நேற்று கலிபோர்னியா மாகாணத்தில் சன்னிவலே பகுதியில் நிகழ்ந்திருக்கிறது.

இங்குள்ள காஸ்ட்கோ எனும் பல்பொருள் அங்காடியில், குவிந்த மக்கள், வீட்டிற்கு தேவையான அனைத்து உணவு, அத்தியாவசிய பொருட்கள், டிஸ்யூ பேப்பர், கை மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் பொருள்கள் என்று பல நாட்களுக்கு தேவையானதை வாங்கி குவித்தனர்.

சரக்குகள் வேகமாய் விற்றுத்தீர, இதை அறிந்த மக்கள் முண்டியடித்து போட்டி போட்டு பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இப்படி வெறித்தனமாய், குவிந்த மக்களிடம், நீங்கள் இவ்வாறு வாங்கி பதுக்கிவைப்பதை தவிருங்கள், எங்களிடம் தேவையான கையிருப்பு இருக்கிறது என்ற நிர்வாகத்தினரின் வேண்டுகோளை காற்றில் பறக்கவிட்டனர் மக்கள்.

ஏப்ரலில் கோடை காலம் தொடங்கினாள் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துவிடும் என்று எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசிவரும் மக்களும் இந்த வரிசையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நீண்ட வரிசையில் நிற்பதையும் இதுபோன்ற முணுமுணுப்புகளயும் கேட்க விரும்பாத மக்கள், அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் ஓசையின்றி பொருட்களை வாங்கி குவிக்கத்தொடங்கியிருப்பதாக அமேசான் நிறுவனம் கூறுகிறது.

எதுஎப்படியோ, பாம்பென்றால் நடுங்கிய காலம் போய், கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டவுடனே உச்சி முதல் உள்ளங்கால் வரை பயம் வரும் காலம் இப்பொழுது என்பதை உணர்த்துகிறது இந்த காணொளி.