புதுடெல்லி:
கொரோனா வைரசுக்கானா தடுப்பூசியை கண்டுபிடிக்க பல குழுக்கள் கடுமையாக உழைத்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி தயாரான பிறகு அவை நியாயமான மற்றும் சமமான முறையில் அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை உருதி செய்ய மோடி அரசு அயராது உழைத்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் நேற்று தெரிவித்துள்ளார்.

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் இதைப்பற்றி தெரிவித்துள்ளதாவது: கொரோனா தடுப்பூசிகள் தயாரானவுடன் மக்கள் அனைவருக்கும் நியாயமான மற்றும் சமமான முறையில் வினியோகம் செய்யவிருப்பதை உறுதி செய்ய மோடி அரசு 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தவறாமல் தடுப்பூசி கொடுப்பதே எங்கள் கொள்கையாகும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை நாங்கள் ஒரு உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்து மேலும் ஆராய்ந்து வருகிறோம். 2021- ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு தடுப்பூசி கொடுப்பதே எங்கள் தோராயமான இலக்காக உள்ளது.

மேலும் முன்னணி சுகாதார ஊழியர்களான அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், கண்காணிப்பு அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், நோயாளிகளை கண்டறிந்து பரிசோதனை செய்யப்பட்டு தடுப்பூசிகள் கொடுக்கப்படும் என்று ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.