புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தொற்று புதிய இடங்களிலும் பரவி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களில் 66 சதவீதத்தினர் 50 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற உயிர்ப்பலிகளின் அளவு தற்போது 2.10 சதவீதமாக சரிந்துள்ளது. மார்ச் 25-ந் தேதி ஊரடங்கு போடப்பட்டதில் இருந்து பதிவாகி உள்ள மிகக்குறைந்த அளவு இது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று புதிய இடங்களிலும் பரவி இருக்கிறது. ஆனாலும் மொத்த தொற்று பாதிப்பில் 82 சதவீதம், 10 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மட்டுமே உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 938 ஆகும். இவர்களில் 68 சதவீதத்தினர் ஆண்கள். 32 சதவீதத்தினர் பெண்கள். ஆக, பெண்களை விட ஆண்களே அதிகம் இறந்துள்ளனர்.
இறந்தவர்களில் பாதிப்பேர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர். 37 சதவீதத்தினர் 45-60 வயதினர். 11 சதவீதத்தினர் 26-44 வயதினர்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளோர் எண்ணிக்கை 12.30 லட்சம் ஆகும். இது தற்போது கொரோனா பாதித்து, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு ஆகும்.
28 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தினந்தோறும் 10 லட்சம் பேருக்கு 140-க்கு மேற்பட்ட கொரோனா மாதிரிகள் என்ற அளவில் பரிசோதித்து வருகின்றன.
இந்தியாவில் ஒரு நாளில் 10 லட்சத்துக்கு 479 மாதிரிகள் என்ற அளவில் பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
28 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படும் அளவு 10 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா உறுதி செய்யப்படும் அளவு 8.89 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.