டெல்லி:

கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை மேலும்  நீட்டிக்க 7 மாநிலங்கள் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தியாவின் கொரோனா பரவலில் ஹாட்ஸ்பாட்டாக தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாடு திகழ்ந்துள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து  ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் பலரை மாநில அரசுகள் தேடி வருகின்றன. இதனால் கொரோனா பாதிப்பு இந்தியாவில் திடீரென பலமடங்கு உயர்ந்து உள்ளது.

ஏற்கனவே கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்டவர்களால் நோய்தொற்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம்,  7ந்தேதிக்குள் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் என கடந்த மார்ச் 30ந்தேதி முதல்வர் சந்திரசேக ராவ் அறிவித்திருந்தார். ஆனால், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பலர்,  தப்லிகி மாநாட்டில் கலந்து கொண்டது தெரிய வந்த நிலையில், அவர்களில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இவர்களில் 6 பேர் மரணத்தை தழுவிய நிலையில், 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

7ந்தேதி கொரோனா இல்லாத மாநிலமாகும் தெலுங்கானா..

இதைத்தொடர்ந்து, வரும் 14ந்தேதியுடன் முடிவடைய உள்ள ஊடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். தெலுங்கானா மாநிலத்தில் ஏப்ரல் முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் பல மாநிலங்கள் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று மத்தியஅரசிடம் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரேதேசம், அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களும், ஊரடங்கை நீட்டிக்க மத்தியஅரசுக்க கோரிக்கை விடுத்துள்ளன.

இதனால், மத்தியஅரசு, ஊரடங்கு தளர்வு குறித்த முடிவுகள் எடுக்க  முடியாத சூழ்நிலையில் திண்டாடி வருகிறது.

ஆனால், கொரோனா பரவலில் 2வது இடத்தில் இருக்கும் தமிழகம் இதுவரை அதுபோல எந்தவொரு கோரிக்கையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.