ஜெனீவா: 7 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை இன்னமும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்க பல நாடுகள் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தின. ஆனால், 2ம் அலை பரவ பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தொற்று பரவல் குறைந்தாலும் கட்டுப்பாடுகளை உடனே நீக்கக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வந்தது. இந் நிலையில், 7 வாரங்களுக்குப் பிறகு முதல் முறையாக உலக அளவில் கொரோனா பாதிப்பு உயர்வை சந்தித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. ஆகையால் உலக நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது: கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் உயர்வது ஏமாற்றம் தருகிறது. கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் என்பதால் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என்றார்.