டெல்லி: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு, வைத்து நாட்டை 3 மண்டலங்களாக பிரிக்க ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, 21 நாள் ஊரடங்கை பிரமர் மோடி அறிவித்தார்.
அந்த ஊரடங்கு, வரும் 14ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனாலும், கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசிடம் சில யோசனைகள் முன் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் கொரோனா பாதிப்பால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டியதன் பொருட்டு இந்தியாவை சிகப்பு, மஞ்சள், பச்சை என்று 3 மண்டலங்களாக பிரிக்க வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட அதிக உயிரிழப்புகள் உள்ள பகுதிகளை சிகப்பு மண்டலங்களாகவும், பாதிப்பு எண்ணிக்கை ஓரளவுக்கு உள்ள பகுதிகளை மஞ்சள் மண்டலமாகவும் , கொரோனா பாதிப்பே இல்லாத பகுதிகளை பச்சை மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்படும் பகுதிகளில் ஊரடங்கு தொடரும். மஞ்சள் மண்டலமாக வகைப்படுத்தும் பகுதிகளில் பொருளாதாரத்தை உயர்த்தும் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது. பச்சை மண்டலமாக பிரிக்கப்படும் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும். இந்தியாவில் ஏறத்தாழ 400 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பே இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்கு பொருளாதாரத்தை உயர்த்தும் ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.