டெல்லி:
இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவால், நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உருவாகி இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இதை நிரூபிக்கும் வகையில் பல பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, இளஞ்சிவப்பு சீட்டுகளை வழங்கி வருகின்றன. இது இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பேயாட்டம் ஆடி வருகிறது. இந்தியாவில் அதன் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் முயற்சியில், மத்திய மாநில அரசுகள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றன.
இந்தியாவை பொருத்தவரை, லட்சக்கணக்கானோருக்கு வாழ்வழித்து வரும் ஐடி நிறுவனங்களும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை ஐடி துறையில், சுமார் 45-50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர், இதில் சிறிய நிறுவனங்களில் சுமார் 10-12 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
பிரபலமான முதல் ஐந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் பல லட்சம் பணியாற்றி வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம், பல பொறியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுமோ என்று அச்சம் ஏற்பட்டு உள்ளது.
புனேவில் சில ஐடி நிறுவனங்கள் பலரை கொத்து கொத்தா பணி நீக்கம் செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் பணியாற்றிய ஊழியர்கள் குமுறி வருகின்றனர். பெரும்பாலான பிபீஓ நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.
அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்து வரும் பொறியாளர்களில், சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் வேலை இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக மனிதவள மேம்பாட்டுத்துறை வல்லுநர்கள் (HR) மற்றும் தொழில்துறை நிபுணர்கள் கணித்து உள்ளனர். இது ஒரு தொடக்கமாகவே இருக்கும் என்றும், இது படிபடிப்யாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
முதன்மையாக விமான நிறுவனங்களை நம்பியுள்ள பணி நிறுவனங்களின் வணிகம் 85 சதவீதம் குறைந்து விட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பலரது சம்பளம் பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு நாங்கள் வருந்துகிறோம் என்றும் சில நிறுவனங்கள் தெரிவித்து உள்ளது.
நிலைமை மோசமடைந்து வருவதால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரும் என்று FITE- மகாராஷ்டிராவின் மாநிலத் தலைவர் பவன்ஜித் மானே அச்சம் தெரிவித்து உள்ளார்.
“பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்து வந்த பலர், வேலையின்மை காரணமாக, தாங்கள் பெஞ்சில் அமர்த்தப்பட்டு, தங்களுக்கு இளஞ்சிவப்பு கார்டு கொடுக்கப்பட்டது, பின்னர் ஒருசில நாளில், பெஞ்ச் ஊழியர்கள் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டோம் ” என்று தெரிவித்து உள்ளனர்.
புதிய திட்டங்களில் ஈடுபடுத்தப்பட வேண்டிய ஊழியர்கள் கடுமையான அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளதாகவும், அவர்களையும் விரையில் வேளியேறும்படி அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஒரு சில பெரிய வாடிக்கையாளர்களைச் சார்ந்திருக்கும் சிறிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது, இதுபோல பெரும்பாலான நிறுவனங்களில் பணி நீக்கம் நடக்கும் என்று ஊழியர்களின் நிறுவனமான CIEL HR Services இன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித்ய நாராயண் மிஸ்ரா பயமுறுத்தி உள்ளார்.
தற்போதே சிறிய நிறுவனங்கள் ஒவ்வொரு கட்டமாக பணியாளர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளன. புனேவில் zCon Solutions இல் ஒரு வருடத்திற்கு மேலாக பணிபுரிந்த பல பொறியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அவர்களிடம் இருந்து கட்டாய ராஜினாமா பெறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கூறிய பொறியாளர் ஒருவர், நாங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும், “நாங்கள் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம், அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, ”என்று தெரிவித்து உள்ளார்.
நொய்டாவின் குருகிராம் பகுதியில் உள்ள ஒரு பிபிஓ நிறுவனம் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
ஃபோரம் ஆஃப் ஐ.டி ஊழியர்களின் (FITE) ஹரியானா தொழிலாளர் செயலாளருக்கு எழுதிய கடிதத்தின்படி, இரண்டு மணி நேர நோட்டீஸ் கொடுத்து ராஜினாமா செய்ய நிறுவனம் ஊழியர்களைக் கேட்டதாக ஐ.டி தொழிற்சங்கம் கூறியுள்ளது.
ஆனால், இந்த பணி நீக்கங்களை எந்தவொரு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை.
இந்த விவகாரம் நாட்டின் பொருளாதாரத்தில் தேக்க நிலையை உருவாக்கும் என்றும், 25 ஆண்டு வரலாற்றில் இது முதல் பொருளாதார தேக்கமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து உள்ளன.
மேலும், பெரும்பாலான நிறுவனங்கள் பணியமர்த்தலை இடைநிறுத்தியுள்ளன மற்றும் பல தொடக்க நிறுவனங்கள் சம்பள வெட்டுக்களை அறிவித்துள்ளன. செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஆட்சேர்ப்பு மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது என்று சிஐஎல் எச்.ஆரின்அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இருந்தாலும், இந்த ஐடி நிறுவனங்கள் எப்போது மீண்டும், பழைய நிலைக்கு மாறும் என்பது கணிக்க முடியாது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.