பெய்ஜிங்: உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பல நாடுகளில் இருந்து சீனா தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

உலகின் மற்ற நாடுகளுக்கும் வெகு வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு வருபவர்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் சீனர்கள் என்றால் ஒருவித பீதிக்கு ஆளாகின்றனர். ஜப்பானில், # ChineseDon’tComeToJapan என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது. சிங்கப்பூரில், பத்தாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் சீன நாட்டினரை நாட்டிற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஒரு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஹாங்காங், தென் கொரியா மற்றும் வியட்நாமில், வணிகங்கள் சீன வாடிக்கையாளர்களை வரவேற்கவில்லை. பிரான்சில், ஒரு பிராந்திய செய்தித்தாளின் முதல் பக்க தலைப்பு மஞ்சள் எச்சரிக்கை என்று  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

டொராண்டோவின் புறநகரில், சமீபத்தில் சீனாவிலிருந்து திரும்பி வந்த ஒரு குடும்பத்தின் குழந்தைகளை 17 நாட்களுக்கு வகுப்புகளுக்கு வெளியே வைத்திருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரியிருக்கின்றனர்.

விமான நிறுவனங்கள் தொற்றுநோயின் மையமான வுஹான் மற்றும் பிற சீன நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்கின்றன. மாநாடு ஏற்பாடு செய்துள்ள அமைப்பாளர்கள் சீன பிரதிநிதிகளை கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

இத்தாலி பிரதமர் சீனாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களை நிறுத்துமாக கூறி உள்ளார். மலேசியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் வுஹான் அமைந்துள்ள ஹூபே மாகாணத்திலிருந்தும், சீனாவின் மற்ற பகுதிகளுக்கு செல்வதற்கான விசாக்களை தற்காலிகமாக நிறுத்திவிட்டன.

சீனாவிலிருந்து வருபவர்களுக்காக எங்கள் வீட்டு வாசலில் நுழைய வேண்டாம் என்று ஒரு பதாகையை வைக்க வேண்டிய நேரம் இது என்று நினைப்பதாக பிலிப்பைன்ஸின் சட்டமன்ற உறுப்பினர் ரால்ப் ரெக்டோ கூறினார்.

இதுபற்றி பேசிய ஆசிய சுகாதார கொள்கை திட்டத்தின் இயக்குனர் கரேன் எக்லெஸ்டன், நோய் தொற்றும் சாத்தியமான காரணிகளிடம் இருந்து விலகி கொள்ள வேண்டும் என்ற எதிர்வினை தான் இது என்று கூறியிருக்கிறார்.

சில அரசாங்கங்கள் பீதியைக் குறைக்க முயற்சிக்கின்றன. டொராண்டோவில், அரசியல்வாதிகள், கல்வி நிலையம் மற்றும் சில சமூக குழுக்கள் இணைந்து, 2003ம் ஆண்டு நடைபெற்றது போன்ற நிகழ்வு நடக்கக்கூடாது என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளன.