பீஜிங்:

லகை பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் 17ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள வுகான் நகர் உள்பட 3 நகரங்களுக்கு  அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. முதன்முதலாக சீனாவின் வுகான் நகரில் உள்ள ஒரு  கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘தற்போது  நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வரும் நிலையில்,  ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் இந்த வைரசின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படும் வுகான் நகரில்  1.1 கோடி பேர் வசித்து வருவதாகவும், வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில்,  அங்கு மட்டும் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது இருப்பதாகவும், மேலும்  571 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்றும்  சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா ஒருவரும், தாய்லாந்து நாட்டில் 3 பேரும், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளில் தலா ஒருவரும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயிரிக்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள்  பர்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் நோய் தாக்குதலின் எதிரொலியாக வுகான் நகருக்கான விமான சேவை  உள்பட அனைத்து விதமான பொது போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுஉள்ளது. அந்த பகுதிக்கு யாரும் வரக்கூடாது என்றும், அங்கிருந்து யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.