டெல்லி: டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட 1,500 பேரின் சுகாதார நிலை குறித்து தமிழக அரசு கவலை கொண்டுள்ளது.
தலைநகர் டெல்லியின் நிஜாமுதீனில் ஜமாத் மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1,500 பேர் கலந்து கொண்டதாக தெரிகிறது. கொரோனா பரவல் எதிரொலியாக அவர்களின் உடல்நிலை, அந்த மக்களிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவும் சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது பற்றி தமிழக சுகாதார அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.
அவர்களில் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திரும்பி வந்த குழுவில் சோதனை செய்யப்பட்ட 17 மாதிரிகளில், 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 பேர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஈரோட்டில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் முழுமையான பட்டியல் இல்லை, 819 பேரின் பட்டியல் தயாராக இருக்கிறது.
அவர்களில் பலர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு, அரியலூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
குழுவில் உள்ள அனைவரையும் நாங்கள் இப்போது கண்காணிக்க வேண்டும், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் தாமாகவே முன் வந்து தகவல்களை தருமாறு கேட்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.