வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,000 ஆக அதிகரித்து இருக்கிறது.

உலகின் நிதி நகரமாக அறியப்படுவது அமெரிக்காவின் நியூயார்க் நகரம், இப்போது கொரோனா தொற்று நகரமாக உருவெடுத்து உள்ளது. நியூயார்க்கில் மட்டும் 14000 பேர் பலியாகி உள்ளனர். நியூஜெர்சியில் 78000 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 3,800 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,00,000 ஐ தாண்டி இருக்கிறது. அதே நேரத்தில் 36,000 க்கும் மேற்பட்டோர் கோவிட் -19 தொற்றுநோயால் இறந்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், இன்றுவரை அமெரிக்காவில் 3.78 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்தி உள்ளோம். இது இதுவரை எந்த நாட்டிலும் இல்லை என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: நியூயார்க் மற்றும் லூசியானா போன்ற மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஒவ்வொரு நாட்டையும் விட தனிநபர்களை அதிக எண்ணிக்கையில் சோதித்துள்ளோம். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவான, மேம்பட்ட மற்றும் துல்லியமான சோதனை முறையை அமெரிக்கா கொண்டுள்ளது.

இது நம் நாட்டிற்கு நடந்த ஒரு பயங்கரமான விஷயம். உலகம் முழுவதும் 184 நாடுகளுக்கு நடந்த ஒரு பயங்கரமான விஷயமும் கூட. அதற்கு எந்த காரணமும் இல்லை. அது ஒருபோதும், மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது.

இந்த போரில் இறுதி வெற்றி அமெரிக்காவின் விஞ்ஞான புத்திசாலித்தனத்தால் சாத்தியமாகும். நம்மை போல எதுவும் இல்லை, நம்மை போல யாரும் இல்லை என்று மற்ற நாடுகளே நம்மிடம் கூறுகின்றன என்றார்.