னாஜி

கொரோனாவை ஆயுர்வேதம் மூலம் குணப்படுத்த முடியாது என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.  கோவா மாநிலத்தில் இதுவரை 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 55 வயதான ஒரு நோயாளி குணமடைந்துள்ளார்.  மீதமுள்ளோர் உடல் நிலை சீராக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் என  மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்திருந்தார்.  நேற்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது தினசரி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

பிரமோத் சாவந்த் ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஆவார்.

பிரமோத் சாவந்த், “கோவாவில்  கோரோனா நோயாளிகளுக்கு அலோபதி மருந்துகளுடன் ஆயுர்வேத மருந்தும் அளிக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு ஆயுர்வேத மருந்து அளிக்கப்படுவது முதல் முறையாக கோவாவில் மட்டுமே நடைபெறுகிறது. இது குறித்து எங்கள் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

ஆயுர்வேதம் மட்டுமின்றி எவ்வித மருந்துகளாலும் கொரோனாவை குணப்படுத்த முடியாது.  அதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை.  ஆயுர்வேத மருந்துகள் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தற்போது கோவா மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகள் உடல் நிலை சீராக உள்ளதால் நாங்கள் எங்கள் மருத்துவக் குழு மீது முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.