கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி, சீனாவின் வூஹானிலிருந்து கேரளா திரும்பிய ஒரு மருத்துவ மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதிலிருந்து, ஜூலை 30 வரையிலான கடந்த 6 மாதகாலத்தில் இதுவரை இந்தியாவில் மொத்தமாக 15,88,129 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த 6 மாதங்களில், இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்பான சில அலசல்களைக் காணலாம்.
ஜனவரி 30ம் தேதி, முதல் கொரோனா நோயாளி இந்தியாவில் கண்டறியப்பட்ட பிறகு, மொத்தமாக 100 நோயாளிகள் கண்டறியப்படுவதற்கு 45 நாட்கள் வரை ஆனது. அதன்பிறகு, 1000 நோயாளிகளைக் கண்டறிய 59 நாட்களும், 10,000 நோயாளிகளைக் கண்டறிய 75 நாட்களும், 50,000 நபர்களைக் கண்டறிய 98 நாட்களும் ஆனது.
கடந்த மே 18ம் தேதி 1 லட்சம் நோயாளிகள் என்ற எண்ணிக்கை கடக்கப்பட்டது. அடுத்த 15 நாட்களில் அந்த எண்ணிக்கை 2 லட்சத்தை தொட்டது. அதற்கடுத்த நாட்களில், குறைவான நாட்களில் எண்ணிக்கை அதிகரித்தது.
ஜூலை 16ம் தேதியான நிலவரப்படி 10 லட்சம் நோயாளிகள் என்ற எண்ணிக்கை தாண்டப்பட்டது. அதாவது, 10 லட்சம் நோயாளிகள் என்ற எண்ணிக்கை 169 நாட்களில் எட்டப்பட்டது. தற்போது 183 நாட்களில், 15,88,129 என்ற எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது.
மார்ச் 25ம் தேதி, இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்செய்யப்பட்டபோது, இந்தியாவில் 571 நோயாளிகள் கண்டறியப்பட்டிருந்ததோடு, 10 பேர் அதன்காரணமாக மரணமடைந்திருந்தனர்.
கடந்த மே மாதம் 31ம் தேதி வரை, 1,90,648 நோயாளிகளும், 5,408 மரணங்களும் பதியப்பட்டன. இந்தியாவில் விதிக்கப்பட்ட ஊரடங்கால், இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம், தேவையான மருத்துவ வசதிகளையும் முன்னேற்பாடுகளையும் செய்வதற்கு அதிகாரிகளுக்கு அவகாசம் கிடைத்தது.
இந்தியாவில் வைரஸ் தொற்றியோரில் 88% மற்றும் நிகழ்ந்த மரணத்தில் 85% ஆகியவை, ஜூன் 1ம் தேதியிலிருந்துதான் நிகழ்ந்துள்ளன.
ஜூலை 29ம் தேதி மட்டும், இதுவரையான காலப்படி அதிகபட்சமாக ஒரேநாளில் 52,479 நோயாளிகள் கண்டறியப்பட்டனர். மேலும், ஜூலை 22ம் தேதி முதல் ஒருநாளில் 45,000க்கும் அதிகமான அல்லது அந்த அளவிலான நோயாளிகள் தினசரி கண்டறியப்பட்டனர்.
மேலும், அந்த ஜூலை 22ம் தேதிதான், இந்தியாவில் ஒரேநாளில் அதிகபட்சமாக 1130 பேர் இறந்தனர். அது முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும், 700 நபர்களுக்கும் அதிகமாக (ஜூலை 27 தவிர) மரணமடைந்தனர் என்பதான விபரங்கள் வெளியாகியுள்ளன.