நீங்கள் ஒரு குழந்தையின் பெற்றோராக இருப்பின் உங்கள் குழந்தைக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருக்குமோ என்கிற அச்சம் ஏற்படக்கூடும். ஏனெனில் இன்றைக்கு சமூகவலைத்தளத்தில் அவ்வளவு போலியான தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
உலக அளவில் கரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படத் தொடங்கிய சமயத்தில் இருந்து சமூக வலைத்தளத்தில் இதுபோன்ற தகவல்கள் தவறுதலாக பரிமாறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தரப்பிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது இந்த ஆறு விஷயங்கள் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வைரஸ் தாக்குதல் மக்களின் நேரடி தொடர்பு மூலம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தும்மல், காய்ச்சல் போன்ற வியாதிகளால் அவதிப்படும் நபர்களிடம் இருந்து குழந்தைகளை விலகியிருக்க சொல்லப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதல் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தாண்டி இதை எப்படி கண்டறிய முடியும் என்பதை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் விளக்கியுள்ளது. அதன்படி காய்ச்சல், இருமல் மூச்சு திணறல் போன்றவை இந்த வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் கூடுதலாக நிமோனியா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வியாதியால் கூடுதல் பாதிப்புகள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அவை வயது முதிர்ந்த நபர்களிடம் மட்டுமே அது போன்ற பாதிப்புகளை உண்டாகும். இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள கைகளை அவ்வப்போது நன்கு கழுவ வேண்டும். குறைந்தபட்சம் 20 நொடிகள் ஆவது சோப் போட்டு கைகளை கழுவ வேண்டும். இருமல் மற்றும் தும்மல் வரும்போது முகத்தை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. தேவையேற்படின் டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்த அறிவுறுத் தப்பட்டுள்ளது.
முக மாஸ்க் அணிவதால் வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியுமா என்கிற கேள்விக்கு, அப்படி எதுவும் இல்லை என்றும், எந்த அறிகுறியும் இல்லாத நேரத்தில் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது.
கர்ப்பமுற்ற பெண்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளார்களா என்ற கேள்விக்கு, கர்ப்பமுற்ற பெண்கள் மூலம் அவர்களின் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படும் என்பதற்கு இதுவரை எந்த சான்றும் இல்லை என்றும், ஒருவேளை
அவ்வாறு பாதிப்பு கர்ப்பமுற்ற பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால் அது குழந்தைக்கு என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்வதற்கான சான்றும் தற்போது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸை போக்க மாத்திரைகள் மற்றும் மருந்துகள் இருக்கிறதா என்கிற கேள்விக்கு, இந்த வைரஸை முற்றிலுமாக போக்க தற்போதைக்கு எந்த மாத்திரை மற்றும் மருந்துகளும் இல்லை என்றும், ஒருவர் தம்மை தூயமாக வைத்துக் கொண்டாலே வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைப்பை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து வைரஸ் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.