சிகாகோ

கொரோனா வைரஸ் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் நுண்ணுயிரி என உலக செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ்  கூறி உள்ளார்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது.   இதையொட்டி உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.   பல நாடுகளில் வெளிநாட்டினர் குறிப்பாகச் சீனாவில் இருந்து வருபவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்க மருந்து மற்றும் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகச் செல்வந்தர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான பில்கேட்ஸ் நடத்தும் தொண்டு நிறுவனம்  இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ 10 கோடி டாலர் உதவித் தொகை அளித்துள்ளது.   பில்கேட்ஸ்  நியு இங்கிலாந்து மெடிசன் ஜர்னல் என்னும் பத்திரிகையில் தலையங்கம் எழுதி உள்ளார்.

அதில் அவர், “உலகெங்கும் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக அரவி வருகிறது.   எனவே இந்த வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க நாம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு உதவி தேவைப்படுகிறது.   குறிப்பாக ஆப்ரிக்க மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுக்கு நாம் உதவ வேண்டிய அவசியத்தில் உள்ளோம்

இந்த கொரோனா வைரஸ் நூறாண்டுக்கு ஒரு முறை உருவாகும் நுண்ணுயிரி ஆகும்.  இதைப் போல சார்ஸ் உள்ளிட்ட பல வைரஸ்களால் உலக நாடுகள் தாக்கப்பட்டு கடும் பாதிப்பு அடைந்துள்ளன.  எனவே அனைத்து நாடுகளிலும் சுகாதார அமைப்பை மேம்படுத்த வேண்டும்.  எனவே உலக நாடுகள் அனைத்தும் தங்களால் முடிந்த நிதி உதவி மட்டுமின்றி தொழில் நுட்ப உதவிகளையும் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.