லண்டன்
கொரொனா வைரஸ் உலகெங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பரவி வருவதாக லண்டன் நகர ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சீன நாட்டில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் தாக்குதல் விரைவில் அந்நாடெங்கும் பரவியது. சீனாவில் இது வரை இந்த வைரஸ் தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் மரண அடைந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவி வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.
லண்டனில் இருந்து வெளியான ஆய்வறிக்கையில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் இரண்டு முதல் மூன்று பேருக்கு இதைப் பரப்புகின்றனர் எனவும் இவ்வாறு பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆயினும் சீனா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துமே இந்த பரவலைக் கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.
மேலும் தற்போது இந்த வைரஸ் பரவி வரும் வேகத்தைப் பார்க்கும் போது பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதிக்குள் இது மேலும் அதிக அளவில் பரவும் என அந்த ஆய்வறிக்கை அச்சம் தெரிவித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் டிசம்பர் மாதம் முதல் இந்த வைரஸ் தாக்குதல் இருந்துள்ளது. இந்நகரில் மட்டும் வரும் 4 ஆம் தேதிக்குள் 1,90,000 பேர் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதே நிலை மற்ற சீன நகரங்களிலும் தென்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் சீன நாட்டில் இருந்து வந்தவர்களில் 4 பேரிடம் கொரொனா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது எனவே ஆஸ்திரேலியாவில் உலகின் அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் தீவிர பரிசோதனைக்கு பிறகே நாட்டினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.
[youtube-feed feed=1]