புதுடெல்லி:
ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முதல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
கோவேக்சின் என்றழைக்கப்படும் இந்த மருந்தை சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் உள்ள 12 மருத்துவமனைகளில் சோதனை செய்ய ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியது.
ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தும் வகையில் சோதனையை வேகப்படுத்த வேண்டும் என்றும் கடிதம் மூலம் மருத்துவமனைகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டிருந்தது.
அதேசமயம், தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம் என தொற்று நோயியல் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே, விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் பரிசோதனை நடத்தப்படும் என ஐசிஎம்ஆர் விளக்கமளித்துள்ளது. மேலும், இந்திய மருத்துவ நிபுணர்களின் திறன் மீது தயக்கம் காட்டவேண்டாம் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
பரிசோதனையின் போது மிக முக்கியமாக செய்ய வேண்டிய நடைமுறைகள் எதையும் தவிர்த்துவிடாமல், பரிசோதனையில் பங்கேற்கும் நபர்களை தேர்வு செய்வது விரைந்து நடத்தப்படும் என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. மற்ற எதையும்விட கொரோனா சிகிச்சையில் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.