வாஷிங்டன்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி ஒரு பெண்ணுக்குச் செலுத்தப்பட்டு சோதனை தொடங்கப்பட்டுள்ளது.
உலக மக்களை கடுமையாகப் பாதித்து வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.. சீனா, அமெரிக்கா உள்ளிட பல நாடுகளும் இந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சியட்டில் நகரில் உள்ள கைசர் பெர்மனண்ட் என்னும் நிறுவனம் இதற்கான தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்ததால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கைசர் பெர்மனண்ட் நிறுவனம் நேற்று ஒரு பெண்ணுக்கு இந்த தடுப்பூசியைச் செலுத்தி சோதனையைத் தொடங்கி உள்ளது இந்த சோதனைக்குத் தேசிய சுகாதார நிறுவனம் நிதி உதவி அளித்துள்ளது. சோதனைக்காக இந்த பெண்ணுக்கு தடுப்பு ஊசி மருந்து கைகள் மூலம் செலுத்தப்பட்டுள்ள்து.
இந்த சோதனைக்கு ஒப்புக் கொண்ட பெண்ணின் பெயர் ஜெனிஃபர் ஹாலர் என்பதாகும். சுமார் 43 வயதாகும் இவருக்குப் பதின்ம வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இந்த சோதனையில் தாம் பங்கு பெறுவதால் பெருமை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சோதனையால் அவருக்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது என நிபுணர்கள் உறுதி அளித்துள்ளனர்.
இந்த சோதனை வெற்றி பெற்றால் உலக மக்களுக்கு மிகவும் மன நிம்மதி ஏற்படும் எனவும் அதற்குத் தாமும் ஒத்துழைப்பதால் தாம் பெருமை அடைந்துள்ளதாக ஜெனிஃபர் தெரிவித்துள்ளார். இந்த சோதனை வெற்றி பெற்றால் இன்னும் எத்தனை மாதங்களில் இந்த மருந்து விற்பனைக்கு வரும் என்பது குறித்து இன்னும் தெளிவாகக் கூறப்படவில்லை.