டெல்லி: இந்திய மக்களை கடந்த ஓராண்டாக வாட்டி வதைத்து வரும் கொரோனாவை ஒழிக்கும் வகையிலான தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில் முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கின்றனர்.
உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இன்று காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதற்காக மொத்தம் 3,006 இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 100 பேர் வீதம் 3 லட்சத்திற்கும் மேலானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் 166 மையங்களில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படுகின்றன.
முன்னதாக, தமிழகத்திற்கு முதல்கட்டமாக 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்துள்ளன. இதில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு 5.36 லட்சமும் , பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் 20 ஆயிரமும் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் முதற்கட்டமாக 5.36 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னையில் 12 இடங்கள், கோவையில் 4 இடங்கள், மதுரையில் 5 இடங்கள், திருச்சியில் 5 இடங்கள், சேலத்தில் 7 இடங்கள் என தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் இன்றுமுதல் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.