டில்லி

ந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தேர்தல் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் போல் விரைவாக நடக்க வேண்டும் என பிரதமர் மோடி யோசனை தெரிவித்துளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதனால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மெதுவாக குறைந்து வருகிறது  ஆயினும் எந்த நேரமும் மீண்டும் தொற்று அதிகரிக்கலாம் என ஒரு அச்சம் உள்ளது  எனவே கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்திய அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

இது குறித்து பிரதமர் மோடி தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.  மருத்துவ நிபுணர்களுடன் தொடர்ந்து அவர் ஆலோசனை செய்து வருகிறார்.  அவ்வகையில் நேற்று அவர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.  அப்போது பிரதமர் ஒரு சில பரிந்துரைகளைக் கூறி உள்ளார்.

பிரதமர் மோடி, “இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனாவுக்கு எதிரான 3 தடுப்பூசிகள் முக்கிய கட்ட பரிசோதனையை எட்டியுள்ளன. இதில் 2 தடுப்பூசிகள் 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனையிலும், ஒன்று 3-ம் கட்ட சோதனையிலும் உள்ளன.  இது மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், பூடான், வங்காளதேசம், மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்தை ஆகிய அண்டை நாடுகளிலும் தடுப்பூசி உற்பத்தியில் இந்திய விஞ்ஞானிகள் இணைந்துள்ளனர்.

தவிர வங்காளதேசம், மியான்மர், கத்தார் மற்றும் பூடான் நாடுகளில் இருந்து  தடுப்பூசியை மனித பரிசோதனை செய்ய கோரிக்கைகள் வந்துள்ளன.  ஆகவே எனவே சர்வதேச சமூகத்துக்கு உதவும் வகையில், நமது சேவையை அண்டை நாடுகளுடன் நிறுத்திக்கொள்ளாமல் ஒட்டுமொத்த உலகுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசி சேமிப்பு, வினியோகம் மற்றும் நிர்வாகத்துக்காக மாநில அரசுகள் மற்றும் தொடர்புடைய துறையினருடன் ஆலோசித்து வரும் கொரோனா தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய குழுவினர் இது தொடர்பாக விரிவான செயல் திட்டத்தை உருவாக்கி வழங்கி உள்ளனர். இதில் தடுப்பூசிக்கான முன்னுரிமை மற்றும் வினியோகம் குறித்து மாநிலங்களுடன் இந்த நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது.

நமது நாட்டின் புவியியல் நீட்டம் மற்றும் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, விரைவாகத் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய முழு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் விரைவாகக் கிடைக்கும் வகையில் தடுப்பூசி வினியோக அமைப்பை உருவாக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசிக்கான பொருட்கள், வினியோகம், நிர்வாகம் போன்றவற்றில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், கடுமையாக வைக்க வேண்டும். இத்துடன் குளிரூட்டப்பட்ட சேமிப்பு சங்கிலி, வினியோக கட்டமைப்பு, கண்காணிப்பு செயல்முறை, நவீன அணுகல், ஊசி உள்ளிட்ட துணை உபகரணங்கள் தயாரித்தல் போன்றவற்றையும் இணைக்க வேண்டும்.

ஏற்கனவே தேர்தல்கள், பேரிடர் நிர்வாகம் போன்றவற்றில் நல்ல அனுபவங்களை நாம் பெற்றுள்ளோம். அதே வழியில் தடுப்பூசி வினியோகம்  நிர்வாக அமைப்பு மூலம் விரைவாக நடக்க தேவையான சூழலை உருவாக்க வேண்டும். இவற்றில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்ட அளவிலான துறைகள், சிவில் சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள், குடிமக்கள் மற்றும் அனைத்து துறை நிபுணர்களையும் ஈடுபடச் செய்ய வேண்டும்” என மோடி தெரிவித்துள்ளார்.